வியாழன், 16 செப்டம்பர், 2010

அம்மா பாட்டி வீடு - பகுதி 2

பாட்டி வீட்டின் தோட்டம் சற்று பெரியது. அதில் கருவேப்பிலை மரம், வேப்பம் மரம், மாமரம், நர்த்தம் மரம் என்று பல வித மரங்கள் உண்டு. மதிய நேரம் பாட்டியின் அறுசுவை உணவை உண்ட பின் வேப்பமர நிழலில் அமர்வது ஒரு தனி சுகம். பின்புற வேப்பமரம் சற்று பெரியது அதனால் நல்ல சுகமான காற்று வரும். சில நேரம் பின் தாவரத்தில் உறங்கியதும் உண்டு. பாட்டி தினமும் காலை வீட்டில் இருந்து கிணற்று அடி செல்லும் பாதையை மாட்டு சாணம் கரைத்து தெளிப்பார்கள் (இயற்கை கிருமி நாசினி :-)). காலை சாணம் தெளித்த தரை பார்பதற்கு இளம் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் மிகவும் அழகாக இருக்கும்.
கருவேப்பிலை மரம் ஏறுவது தான் எளிது, அது நல்ல வாட்டமாக ஏறுவதற்கு வளைந்து இருக்கும்.

நான் பாட்டி வீட்டில் இருக்கும் பொழுது காலை எழுவதற்கு மனமே இருக்காது. பாட்டியின் திட்டு, ராகம் மாதிரி இருக்கும் (பெண் பிள்ளை இவ்வளவு நேரம் தூங்ககூடாது, எப்போ காலை உணவு அருந்துவது, ......) வேறு வழி இல்லாமல் எழுந்து வரவேண்டும்.
மெதுவாக பின்கட்டை ரசித்து கொண்டே துணி துவைக்க பெரிய கருங்கல் ஒரு மேடையில் போட்டு இருக்கும் அதில் அமர்ந்து பின்புறம் உள்ள வயல், முள்வேலிக்கு அடுத்து இருக்கும் குயவர் வீடு, அங்கு அவர்கள் களிமண் பிசையும் விதம், சக்கரத்தை சுற்றி அழகாக பானை அல்லது சட்டி செய்வதை ரசித்து, மகிழுந்து பல் துலக்கி முடிவதற்குள் பாட்டி சுடுநீர் வைத்திருப்பார்கள்.
தாத்தா அதற்குள் குளித்து நீரில் நனைத்து பிழிந்த துணியை இடுப்பில் கட்டி கொண்டு செம்பரதம் செடியில் இருந்து சிவப்பு செம்பரதம் பறித்து கொண்டு இருப்பார்கள் (என்றாவது நான் அதிகாலை எழுந்து நீராடி இருந்தால் நானும் தாத்தாவுடன் பூ பறிப்பது உண்டு). நான் மிக விரைவாக நீராடி முடித்து பூஜை முடிப்பதற்குள் சென்று அமர்ந்து விடுவது என்னுடைய பழக்கம்.
பூஜை முடிந்த பின் பாட்டியின் சூடான பலகாரம் தயாராக இருக்கும். அது பெரும்பாலும் பஞ்சு போல் இருக்கும் இட்லி, தேங்காய் சட்னி அல்லது சாம்பார், அன்று காலை தயிரில் கடைந்த வெண்ணை, கட்டி தயிர்.
காலை உணவு முடிந்த பின் பாட்டி ஏதேனும் எனக்கு வேலை தருவார்கள்.
இன்னும் பயணம் செய்வோம் மகிழ்ச்சியுடன் .......

கருத்துகள் இல்லை: